Jan 27, 2009

"தமிழன் என்றே அறியப்படுவோம்"

நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் இதை நான் முதலிலேயே இங்கே பதிய காரணம் உண்டு. இந்தியாவிற்கு எதிராக எழுதினால் உடனே சில "ஜந்துக்கள்" எழுதியிருப்பவன் "ஈழத்தமிழன்" என்று சொல்லி விடுகிறார்கள் எனவே தான் மீண்டும் சொல்கிறேன் நான் தமிழ்நாட்டு தமிழன். இதோ விஷயத்தை தருகிறேன். "ஓ இந்தியர்கள் என்று இன்னும் சொல்லி கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தமிழர்களே.., மீண்டு வாருங்கள்.., நம் இனத்தை மீட்க வாருங்கள் அல்லது உங்களை மீட்டு கொள்ளவாவது "இந்தியன்" என்ற பிரமையில் இருந்து மீண்டு வாருங்கள்..., இங்கே தேசியம் என்பதில் நமது தமிழ்நாடு அடக்கம் இல்லை என்பதை நமது பிடரியில் அடித்து பலமுறை அவர்கள் நிருபித்து விட்டார்கள். காவிரிக்காக கன்னடன் அடித்தான் பலமுறை, முல்லை பெரியாறு_க்காக கேரளத்தவன் அடித்தான் பலமுறை, பாலாற்றுக்காக தெலுங்கன் அடித்தான் பலமுறை, மாரட்டியத்திலும் "வெளியேறி ஒடு" என்று சிலமுறை அடித்தான். இப்படி சிலமுறை பலமுறை பலரால் அடிப்பட்டு நாம் இன்று சுயநினைவை இழந்து விட்டதாகவே உணர்கிறேன். நமக்கு சுரணை என்ற "விழிப்பு" வந்து விடகூடாது என்பதற்காக சில "வித்தகர்களும்" "இன விற்பன்னர்களும்" நம் தமிழ்நாட்டினுள் "விழிப்பாகவே" இருக்கின்றனர் அதன் மூலமாய் செழிப்பாகவும் இருக்கின்றனர். உ.பி பாபர் மசூதி இடிப்பாகட்டும், குஜராத் கோத்ரா எரிப்பாகட்டும், நாடாளுமன்ற தாக்குதலாகட்டும், காஷ்மீர் பிரசினையாகட்டும், அஸ்ஸாம் உல்பா தாக்குதலாகட்டும், திரிபுரா தீவிரவாதமாகட்டும், ஆந்திரா தெலுங்கானாவாகட்டும், பெங்களூரு குண்டு வெடிப்பாகட்டும், மும்பை தாக்குதலாகட்டும் இவை எல்லாவற்றுக்குமே நம் மாநில பத்திரிக்கைகளில் முதலிடம் உண்டு, தமிழ்நாட்டு அரசியல் தொழிலதிபர்களின் தொலைக்காட்சிகளில் தலைப்பு செய்தியாகவும் இடம் உண்டு. ஆனால் சிந்தித்து பார் தமிழனே.., இந்தியாவின் ஒரு மாநிலமாவது நம் இனத்தின் ரத்த உறவுகள் செத்து விழுவதை சரியாய் படம் பிடித்து காட்டினவா? அல்லது நம் குரலை தான் செவிமடுத்தனவா? மும்பை தாக்குதலையும் சீமான்களின் சொர்க்கபுரிகளான "தாஜ்" தாக்குதலையும் பட்டி மன்றம் வைத்து குற்றம் யாருடையது என்பதை கண்டுபிடிப்பதிலும் அவர்களெல்லாம் "மும்பைக்கர்கள்" என்று ஒற்றுமையை வளர்ப்பதிலும் காட்டிய வேகத்தில் ஒரு பகுதியை நம் ஈழத்தமிழினம் பற்றிய ஒரு "பட்டி மன்றம்" நடத்த முனைந்திருக்குமா இந்த இந்தியா? மும்பை தாக்குதலுக்கு முசிறி-யில் தட்டி வைத்து கண்டிக்கிறான் தமிழன் ஆனால் ஈழத்தமிழனின் 30 ஆண்டுகால கொலைநிகழ்வுகளை எந்த வேற்று மாநிலத்தவன் "தட்டி" வைத்து கண்டித்தான். தமிழனாய் இந்த பட்டியலை படித்து பார்த்தால் இதை படித்து முடிக்கும் வேளையில் நீங்கள் "இந்தியனாய்' இருக்க வாய்ப்பிருக்காது ஆனால் "பலகாலமாய் பட்ட" பின்னும் மாறாத வரட்டு தேசியம் இன்னும் சிலருக்கு அத்தனை சுலபத்தில் மாறி விடாது என்பதும் எனக்கு தெரியும். நான் என்ன செய்ய முடியும் என்று அத்தனை சுலபத்தில் சலித்து கொண்டு விட்டு விடமாட்டேன் காரணம் இது காட்டு விலங்குகளின் வேட்டையியல் சார்ந்த விஷயமல்ல. இது என் தமிழ் இன மக்களின் வாழ்வியலும் வரலாறும் சார்ந்த விஷயம். நம்மை சுற்றி கட்டப்பட்டிருக்கும் "தேசிய கோட்டை" என்பது வெறும் மாயையே. அடிப்படை கல்வி முறையிலிருந்து ஆரம்பித்து சிந்தித்துப்பார். நம் கண்முன்னே ஒரு மெல்லிய பனிமூட்டம் விலகுவது போல் தோன்றும். ஆரம்பபள்ளியில் தொடங்கி உயர்நிலைப்பள்ளி வரை வரலாற்றில் நாம் படித்ததையும் தமிழனல்லாத மற்ற மாநில மாணவன் கற்றதையும் கொஞ்சம் ஒப்பிட்டு பார் இன்னும் கொஞ்சம் உன் கண்பார்வை முன்னுள்ள பனிமூட்டம் விலகும். காந்தியை நாம் அனைவரும் அறிந்து படித்து வைத்திருக்கிறோம் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் இந்தியாவின் முதல் சுதேசி கப்பல் ஒட்டி தன் வாழ்நாளில் இரு ஆயுள் தண்டணை பெற்று, தன் சொத்துக்களை காங்கிரஸ் கட்சிக்கு தானம் கொடுத்துவிட்டு கடைசிக் கால மரண வாழ்விலும் "விடுதலை" வேண்டி போராடி கஷ்ட ஜீவனத்தில் உயிரைவிட்ட நமது வ.உ.சி_யை தெரியும்? ரோஜாமலர் என்றால் "நேரு' என்கிறான் நம் மாணவன் ஆனால் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரை எத்தனை மற்ற மாநிலத்தவன் அறிந்து வைத்துள்ளான்? இரும்புமனிதன் யார் என்று கேட்டால் நம் மாநில மாணவர்கள் அனைவரும் உடனே வல்லபாய் பட்டேல் என்கிறார்கள் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் "கொடி காத்தவன்" என்று நாம் சொன்னால் "குமரன்" என்று சொல்கிறான்? லோகமான்யர் என்று சொல்ல தொடங்கும் போதே பாலகங்காதர திலகர் வரலாற்றை சொல்கிறான் தமிழ் மாணவன் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் கக்கனையும் காமராசரையும் படித்திருக்கிறான்? "வங்க கவிஞன்" யாரென்றால் நம்மவன் ரவீந்திரநாத தாகூர் என்கிறான் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் "மகாகவி" என்றால் பாரதி என்று தெரிந்து வைத்திருக்கிறான்? மாராட்டிய வீரன் என்றால் சிவாஜி என்று முழு வரலாற்றையும் சொல்வான் நம் இளைஞன் ஆனால் எத்தனை மற்ற மாநில இளைஞன் வெள்ளையனை வெளிற செய்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் அறிந்து வைத்துள்ளான்? பஞ்சாப் பகத்சிங்_ன் வீரம் நம் பட்டி தொட்டியெல்லாம் தெரிகிறது ஆனால் வாஞ்சிநாதனின் வீரம் பஞ்சாப்_ல் எத்தனை பேருக்கு தெரியும்? அம்பேத்கரின் பிறந்த ஊரில் அவருக்கான சிலையை வைக்க அனுமதி மறுக்கிறான் இங்கே பர்லாங்கிற்கு ஒரு அம்பேத்கர் சிலை..! அவர் கருத்தை ஒத்த நம் பெரியாருக்கு தமிழ்நாட்டை தவிர வேறெந்த மாநிலத்திலாவது அங்கீகாரம் தந்தார்களா? அல்லது தரவிட்டார்களா? அரண்மனை வாரிசுகளாய் பிறந்து விட்ட காரணத்தினாலும் எதிர்பாராத விபத்தில் இந்தியாவை ஆள வாய்ப்பு பெற்று விட்ட சில வீணர்களுக்கு இனதுரோகிகளுக்கு கூட தமிழ்நாட்டில் சிலை வைத்து வழிப்படுகிறார் நம்மில் சிலர் ஆனால் வேற்று மாநிலத்தில் எத்தனை பேர் எங்கள் "பேரறிஞர் அண்ணா"_வின் அறிவை ஆற்றலை ஏற்று கொள்ளும் மனம் படைத்தவனாய் உள்ளான்? தமிழ்நாட்டின் கிராமப்புறமாயினும் நகர்ப்புறமாயினும் குறைந்தது ஆயிரம் காந்திநகர், ஆயிரம் நேருநகர், ஆயிரம் இந்திரா நகர், ஆயிரம் ராஜீவ்(?) நகர்,ஆயிரம் படேல் தெரு, நூறு பகத்சிங் நகர், நூறு சிவாஜி நகர், திலகர் திடல் என்று இன்னும் பல மற்ற மாநிலத்தவர் பெயரில் எத்தனை எத்தனை நகர்கள் தெருக்கள்? ஆனால் எத்தனை மாநிலங்களில் நம் தமிழ்நாட்டு முன்னோர்களின் பெயரில் அறிஞர் பெருமக்கள் பெயரில் அரசியல் நேர்மையாளர்கள் பெயரில் வீதிகள் உள்ளன நகர்கள் உள்ளன. வான்மறை வள்ளுவம் தந்த திருவள்ளுவர் சிலையை கன்னடன் சாக்கு துணியால் பிரதேச பரிசோதனை கூட பிணத்தை போல இன்னும் பெங்களூருவிலே கட்டி வைத்திருக்கிறான். ஆனால் நாம் மட்டும் அகன்ற மனமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்டவர்களாய் நம்மை இன்னும் காட்டி கொண்டிருக்கிறோம். ஆனால் நம் நிலை அவர்களுக்கு வேற்றாய் பலப்படுகிறது. அது "தமிழன்" சுரணையற்றவன் என்பதை அவர்கள் அறிந்தே வைத்துள்ளனர். இல்லையென்றால் ஐந்து வட இந்தியன் மரணத்திற்க்காக காங்கோ-வின் மீது ராணுவ தாக்குதல் தொடுத்த "தேசியம்" இத்தனை ஆயிரம் தமிழன் மடிகின்ற வேளையிலும் தமிழனுக்கான செயல்பாட்டில் மீளா உறக்கத்தில் இருக்குமா? இந்தியா ஈழத்தமிழன் விவகாரத்தில் உறங்கவில்லை அது கண்களை மூடி கொண்டே ஈழத்தமிழனின் மரண ஒலத்தை ரசித்து கேட்டு கொண்டுள்ளது. அப்படி ரசித்து கேட் கும் ஒரு ஈரமில்லா கூட்டத்தின் பெயர் தான் இந்தியா என்பதும் அதன் வெவ்வெறு பகுதி மக்களையும் இணைப்பதும் தான் "தேசியம்" என்றால் என் வீட்டு இழவு ஒலியை ரசித்து கேட்கும் அந்த "இந்தியன்" என்ற அடையாளமும் "தேசியம்" என்ற அவமானமும் இனி எனக்கு அவசியமில்லை இதை நான் என் குடும்பத்தாருக்கும் அறிவுறுத்தி விட்டேன் என் பிள்ளைகளுக்கும் கற்று தந்துவிட்டேன். இனி என்னை இந்தியன் என்று காண்பிப்பது என் கடவு சீட்டு மட்டுமே. அதுவும் கூட நாளை மாறலாம் ஒருவேளை எனக்கில்லா விடினும் என் சந்ததியினரின் கடவு சீட்டில் "தமிழன்" என்ற அடையாளம் இருக்கும். இனி என்னை நான் "தமிழன்" என்று மட்டுமே அடையாளப்படுத்தி கொள்வேன். சகோதரர்களே அப்படியானால் நீங்கள்...,

5 comments:

Unknown said...

Yes, hereafter i am a Tamilian not an Indian.

Sakthi said...

Really its very nice. I am not a Indian But I am a Tamilan Tamilan Tamilan

ரமேஷ் கார்த்திகேயன் said...

அய்யா நன்றாக எழுதி உள்ளீர்கள் .
நீங்கள் எழுதியவை அனைத்தும் உண்மை தான்.
தமிழ் நாட்டு தலைவர்களின் வீரத்தையும் , பெருமையையும் பிற மாநிலத்தவர்
தெரியதமல் இருபது நமது பிழையே .

SG Sudha said...

Please continue enlightening us. These are all hard core facts that many of our Tamilians never know. I am proud to be a TAMILIAN.

Anonymous said...

Rameshkar சரியாக சொன்னீர்கள். ஆனால் இந்த மாதிரி காரணங்களை சொல்லி எத்தனை நாள் சுய நலவாதியாக வாழ போகிறீர்கள்