Jan 18, 2007

வீட்டை பார்த்தது போதும் நாட்டை பாரும்.

மறுமலர்ச்சி தி.மு.க வில் நடைபெறும் குழப்பங்களுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்ற மர்ம முடிச்சுக்கள் தற்பொழுது அவிழ்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கட்சிகள் உடைவது பெரிய விஷயமில்லைதான். ஆனால் பெரும்பான்மையான தமிழக கட்சிகளின் "உடைப்பு திருப்பணி"யில் கருணாநிதியின் பங்கு இல்லாமலிருக்காது.
தி.மு.க வின் ஆரம்ப கால தளகர்த்தர்களில் ஒருவரான ஈ.வெ.கி.சம்பத் அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றி தனி கட்சி காண வைத்தவர் கருணாநிதி.
தன் மகன் மு.க.முத்து-விற்காக எம்.ஜி.ஆர் அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றி அ.தி.மு.க. என்ற தனி கட்சி தொடங்கப்பட காரணமாயிருந்தவர் கருணாநிதி.
தன் இளைய மகன் ஸ்டாலினுக்காக வை.கோ அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றி ம.தி.மு.க. என்ற தனி கட்சி தொடங்கப்பட காரணமாயிருந்தவர் கருணாநிதி. தன் கட்சியில் திறமைமிக்கவர்கள் இருந்தால் பின்னாளில் தன் மகனுக்கு போட்டியாய் வந்து விடுவர் என்ற பயத்திலும் பொறாமையிலும் அவர்களை நீக்கி விடும் சர்வாதிகாரிதான் திரு.கருணாநிதி.
கம்யூனிஸ்டு கட்சியை உடைத்தார், மூப்பனாரின் கோபத்தை பயன்படுத்தி காங்கிரசை உடைத்தார். பேராசிரியர் தீரனை பயன்படுத்தி பா.ம.க-வை உடைத்தார்.ஏன் இத்தகைய மனப்பான்மை?
தன் குடும்பமே பிரதானம் என்ற எண்ணமேஅன்றி வேறேதுவுமில்லை.
ஒரு ஏழையாய் அரசியல் பிரவேசம் செய்து இன்று "இந்தியாவின் 20 வது பணக்கார குடும்பம்" என்ற நிலைக்கு தன்னை வளர்த்திக் கொண்டார் திரு.கருணாநிதி. ஆனால் இப்போதும் கூட தன்னை ஏழையின் பங்காளன் என்று பெருமை அடித்துக் கொள்வார். நிலச்சுவான் தாரான மூப்பனாரை அவர் வைத்திருந்த பரந்த நிலம்,வசதியை குத்தி காண்பிப்பது போல "பண்ணையார் மூப்பனார்" என்று எகத்தாளம் பேசுவார்.
ஆனால் இன்று மூப்பனாரை விட இவர் "பெரிய பண்ணையாராக" மாறிவிட்டார்.அடிக்கடி நானும் கம்யூனிஸ்டு சிந்தனை உள்ளவன் தான் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி "நிலப்பிரபுத்துவ சட்டத்தையும், அதிகார குவிப்பு" பற்றியும் இப்போது பேசுவாரா?முல்லை பெரியாறு விஷயத்தில் இரட்டை வேடம் போட்டவரின் முகமூடி எதிர்கட்சிகளால் கிழிக்கப்பட்டப்பின் இப்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட் கதவை தட்ட போகிறார்.
உள்ளட்சி தேர்தலில் நடந்த வன்முறைகளை நாடே கண்டு சினமுற்ற போது அப்படி எதுவும் நிகழவில்லை என்ற கருணாநிதி இப்போது உயர்நீதி மன்ற நீதிபதியின் கருத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?எதிர்கட்சிகளை உடைப்பதை விட்டு விட்டு உருப்படியான திட்டங்களை செய்ய வேண்டும். இலவசம் என்ற பெயரில் மக்களை காலந்தோறும் கையேந்தும் நிலைக்கு தள்ளுவதை விட்டு விட்டு நல்ல தொலைத்தூரத்திட்டங்களை வகுக்க வேண்டும்.மக்களுக்கு தினம் ஒரு மீன் தருவதை விட, எப்படி மீன் பிடிப்பது என்ற கற்றுவித்தலே சிறந்த வழியாகும்.

No comments: