சதாம் உசேன் ஒரு வரலாறு! (பாகம் 1)
30.12.06 அன்று இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்ற தியாகத் திருநாளின் (பக்ரீத் பண்டிகை) தொடக்க நாள் ஆகும். இந்தத் தியாகத் திருநாளில் முஸ்லீம்கள் ஆடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுத்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்த நாளில் சதாம் என்கின்ற ஒரு சிங்கம் பலி கொடுக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிந்து போராடிய ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஈராக்கிய பொம்மை அரசினால் தூக்கில் இடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சதாம் மீதான நீதிமன்ற விசாரணை ஒரு நாடகமாகவே நடந்தது. சதாமுக்கு ஆதரவாக பேசிய நீதிபதி மாற்றப்பட்டார். சதாமுக்காக வாதாடிய வக்கீல்கள் கொல்லப்பட்டனர். இப்படி விசாரணை நடந்த பொழுதே சதாமின் முடிவு தெரிந்து விட்டது. இன்று அவரை சட்டத்தின் பெயரில் கொலையும் செய்து விட்டார்கள்.சதாம் குறித்து பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவரும் ஒரு அடக்குமுறையாளரே. சதாமின் 25 வருட ஆட்சியில் குர்திஸ் மக்களும், சியா பிரிவு முஸ்லீம்களும் பல அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளார்கள். ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். அதற்காக ஈராக்கிய மக்கள் சதாமுக்கு தண்டனை வழங்கி இருந்தால், அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ஈராக்கிய மக்கள் சதாமை தண்டிக்கவில்லை. அமெரிக்காவே சதாமை கொலை செய்திருக்கிறது. சதாம் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருப்பினும் இன்றைய உலக அமைதிக்கும், தேசங்களின் இறைமைக்கும், இனங்களின் விடுதலைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அமெரிக்காவை எதிர்க்கத் துணிந்த ஒரு மனிதராகவே பெரும்பாலான உலக மக்கள் அவரை நோக்குகிறார்கள். அவர்களுக்கு சதாம் ஒரு பெரும் வீரராகவே காட்சி அளிக்கிறார்.ஒரு பகுதியினரால் வெறுக்கப்படுபவரும், மறுபகுதியினரால் வரலாற்றுநாயகனாக போற்றப்படுபவருமாகிய சதாம் படுகொலை செய்யப்பட்டது என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? இதைப் பார்க்கு முன் சதாமின் வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.சதாம் உசேன் 23 ஏப்ரல் 1937இல் திக்ரித்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்து சில மாதங்களிலேயே இவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. சதாமின் தாயார் அவரது கணவரை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாகி விட்டார். இதனால் அந்தப் பகுதி மக்கள் சதாமின் பெற்றோரை மிகவும் அவமானப்படுத்தியும் கேலியும் செய்தார்கள். இதனால் மனமுடைந்த சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.இங்கே சதாமின் பிறந்த தினம் குறித்தும் ஒரு மர்மம் நிலவுவதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய மக்களின் பெரும் வீரராக போற்றப்படும் சலாவுதீனின் 800வது பிறந்த நாளும் சதாம் பிறந்த திகதியாக சொல்லப்படுகின்ற அதே நாளில் வருகிறது. சதாமின் எதிர்ப்பாளர்கள் இந்த பிறந்த தினம் சதாமினால் பொய்யான முறையில் அறிவிக்கப்பட்டதாக சொல்வார்கள். சதாமின் தாயார் சதாம் பிறந்த 9 ஆண்டுகள் கழித்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சதாமை அவரது மாமனாரிடம் வளர்ப்பதற்கு தாயார் ஒப்படைத்தார். ஒரு சாதரண விவசாயியாக வந்திருக்க வேண்டிய சதாமின் வாழ்க்கையை இதுதான் மொத்தமாக புரட்டிப் போட்டது.சதாமின் மாமனார் ஈராக்கின் இராணுவ அணி ஒன்றின் அதிகாரியாக இருந்தார். அப்பொழுது ஈராக்கில் மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். மன்னருக்கு எதிரான புரட்சியில் சதாமின் மாமா இடம்பெற்றிருந்த இராணுவ அணி பங்குபற்றியது. புரட்சி தோல்வியில் முடிந்தது. சதாமின் மாமாவுடன் புரட்சி செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து சதாமின் மாமா விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு அரசியலிலும் ஆட்சியிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மாமாவுடன் வளர்ந்த சதாமையும் அரசியல் ஈடுபாடு தொற்றிக் கொண்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. 1955இல் சதாம் பக்தாத்திற்கு சென்றார். அங்குதான் சதாமின் திருமணமும் நடந்தது. 1956இல் தடை செய்யப்பட்டிருந்த பாத் கட்சியில் சதாம் இணைந்து கொண்டார். இந்தக் கட்சி ஈராக்கின் மன்னரை கவிழ்ப்பதற்கு தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. ஈராக்கின் மன்னரான இரண்டாவது பைசால் மேலைத்தேய சார்பு உடையவராக இருந்தார். இதனால் இவரை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கு அவருடன் இருந்த அதிகாரிகளும் ஆதரவாக இருந்தார்கள். 1958இல் ஈராக் மன்னரை எதிர்த்து அவரது இராணுவ அதிகாரிகள் புரட்சி செய்தனர். மன்னர் கைது செய்யப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். ஈராக் மன்னரின் ஆடைகளற்ற உடல் ஈராக்கின் தெரு ஒன்றில் வீசப்பட்டு கிடந்தது. இந்தப் புரட்சிக்கு சதாம் அங்கம் வகித்த பாத் கட்சியும் துணை நின்றது.மன்னர் ஆட்சி இவ்வாறு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும், புரட்சியை முன்னின்று நடத்திய இராணுவ அதிகாரிகளே ஆட்சியை அமைத்தனர். புரட்சிக்கு தலைமை தாங்கிய அல்கரீம் குவாசிம் என்பவர் ஈராக்கின் பிரதமராக பொறுப்பேற்றார். மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு குவாசிமுக்கு பாத் கட்சி துணை புரிந்தாலும், பாத் கட்சியின் நோக்கம் என்பது ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. இதனால் பாத் கட்சி குவாசிமின் ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு பல முறை முயன்றது. குவாசிமை கொல்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில் சதாம் தீவிரமாக பங்கேற்றார். 1959இல் மேற்கொள்ளப்பட்ட குவாசிமுக்கு எதிரான சதி முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து சதாமை ஈராக் அரசு வலைவீசி தேடியது. சதாம் முதலில் சிரியாவிற்கும் பின்பு அங்கிருந்து எகிப்திற்கும் தப்பிச் சென்றார். பல நூற்றுக் கணக்கான மைல்கள் அவர் கழுதையின் மீது அமர்ந்தே தப்பிச் சென்றார். ஈராக்கில் சதாம் இல்லாமலேயே விசாரணைகள் நடைபெற்று, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. எகிப்திற்கு தப்பிச் சென்ற சதாம் அங்கு கைரோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டார். கைரோவில் இருந்த பொழுதே அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ உடன் சதாமுக்கு தொடர்புகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் பாத் கட்சியின் தலைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. சதாமின் தூரத்து உறவினர் ஒருவர் பாத் கட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பிற்காலத்தில் சதாம் கட்சிக்குள் முக்கியத்துவம் பெறுவதற்கு மேலும் உதவியது.1963இல் குவாசிமின் ஆட்சியை பாத் கட்சி வெற்றிகரமாக கவிழ்த்தது. குவாசிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டார்கள். சதாம் மீண்டும் ஈராக் திரும்பினார். 1964இல் பாத் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. எதிரணியினர் ஆட்சியைக் கைப்பற்றினர். சதாமுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சதாம் தப்பிச் சென்றுவிட்டார்.1968இல் சதாம் இருந்த அணி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. இதன் பிறகு சதாம் மிக வேகமாக உச்சிக்கு சென்றார். யாரும் நெருங்கமுடியாத உச்சத்தை தொட்டார். பாத் கட்சியின் ஆட்சியில் 1968இல் பாதுகாப்பு, பரப்புரை அமைச்சுக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சதாம் 1969இல் உபஜனாதிபதியாக ஆனார். உபஜனாதிபதியாக இருந்த சதாம் 1973இல் ஈராக் இராணுவத்தின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இப்படி அரசு, இராணுவம் என்ற இரண்டு அதிகார மையங்களிலும் செல்வாக்குப் பெற்ற சக்தியாக இருந்த சதாம் 1979இல் பாத் கட்சியின் தலைவராக ஆனதோடு அதே ஆண்டு ஈராக்கின் ஜனாதிபதியாகவும் ஆனார்.1969இல் இருந்து 1979இல் சதாம் ஈராக்கின் ஜனாதிபதியாகும் வரை அவர் தன்னுடைய கட்சிக்குள் இருந்த எதிரிகளிடம் இருந்து பல நெருக்கடிகளை சந்தித்தார். இந்த எதிரிகளை எல்லாம் சதாம் ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டினார். சதாமுக்கு போட்டியாக வரக்கூடியவர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போனார்கள். இப்படி ஒருபுறம் சதிகளை செய்தும், மறுபுறம் சதிகளை முறியடித்துமே சதாம் ஈராக்கின் ஜனாதிபதியாக வந்தார்.1980இல் ஈரானுடன் சதாம் நடத்திய போர் அவரை உலகம் அறியச் செய்தது. இந்தப் போரில் சதாமுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முழு ஆதரவை வழங்கின. சதாமுக்கு நச்சு ஆயுதங்களையும் வழங்கின. இன்றைக்கு சதாம் எந்தக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கொல்லப்பட்டாரோ, அன்று அந்தக் குற்றங்களை ஆதரித்து நியாயப்படுத்தியது இந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான்.
(தொடரும்)
இப்பதிவு www.webeelam.com இருந்து தொகுக்கப்பட்டது. நன்றி..,
No comments:
Post a Comment