சதாம் உசேன் ஒரு வரலாறு! (பாகம் 2)
மேற்குலக நாடுகளும் அதன் ஊடகங்களும் இன்றைக்கு சதாமை ஒரு கொடுங்கோலனாக வர்ணிக்கின்றன. சதாம் கொல்லப்பட்டதை ஆதரிக்கின்றன. ஆனால் இந்த மேற்குலக நாடுகள் ஈராக்-ஈரான் போரின் போதும், குர்திஸ் இன மக்கள் கொல்லப்பட்ட போதும் சதாமை ஆதரித்து நின்றன.1980இல் இருந்து 1988வரை நடைபெற்ற முதலாவது வளைகுடா யுத்தம் என்று அழைக்கப்படுகின்ற ஈராக்-ஈரான் போரில் மேற்குலகம் சதாமை ஆதரித்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அப்பொழுது மேற்குலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தவர் சதாம் அல்ல. ஈரானிய நாட்டின் அதிபராக இருந்த அய்துல்லா கொமெய்னியே மேற்குலக நாடுகளுக்கு விரும்பத்தகாதவராகவும், நீண்டகால நோக்கில் ஆபத்தை விளைவிப்பவராகவும் இருந்தார்.1979ஆம் ஆண்டில் மேற்குலக சார்பான மன்னர் ஷாவின் ஆட்சியை கவிழ்த்து அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சியை ஈரானில் அய்துல்லா கொமெய்னி உருவாக்கினார். அத்துடன் இஸ்லாமிய புரட்சியை மத்திய கிழக்கு முழுவதும் கொண்டுவரப்போவதாகவும் சூளுரைத்தார். இவ்வாறு அய்துல்லா கொமெய்னி மேற்குலக நாடுகளுக்கு ஆபத்தான ஒருவராக அப்பொழுது உருவெடுத்தார்.ஆனால் சதாம் உசேன் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி அல்ல. மற்றைய அரபு நாடுகள் போல் அவர் ஈராக்கை ஒரு முஸ்லீம் நாடாக உருவாக்குகின்ற திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை. சதாமின் பாத் கட்சியும் முற்போக்கு சிந்தனைகளை கொண்டிருந்த ஒரு கட்சியாக இருந்தது. உலக நாடுகளின் உதவியோடு ஈராக்கை பொருளாதாரரீதியாக மேம்படுத்தி அந்தப் பிராந்தியத்தில் ஒரு வல்லரசு நாடாக ஈராக்கை ஆக்குகின்ற கனவுகளே சதாமிற்கு இருந்தது. இவ்வாறு அய்துல்லா கொமெய்னியின் சிந்தனைகளுக்கும் முற்றிலும் மாறான சிந்தனைகளை கொண்டிருந்த சதாம் தமது நலன்களுக்கு ஏற்ற ஒருவராக மேற்குல நாடுகளால் கருதப்பட்டார்.ஈராக்-ஈரான் யுத்தத்திற்கு அடிப்படையாக பல காரணங்கள் இருந்தன. முக்கியமாக ஈராக்கிற்கும் ஈரானிற்கும் பல ஆண்டுகளாகவே எல்லைப்பிரச்சனை இருந்து வந்தது. எல்லையில் இருந்த ஈரானுடைய எண்ணைவளம் மிக்க மாநிலம் ஒன்றை ஈராக் சொந்தம் கொண்டாடியது. எல்லைப் பகுதியில் ஓடிய போக்குவரத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒன்றிற்கும் இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இவ்வாறு ஈரான்-ஈராக் யுத்தத்திற்கு பொருளாதாரம் சார்ந்த எல்லைப்பிரச்சனை ஒரு மிக முக்கியமான காரணமாக இருந்தது.ஈராக் ஒரு அரபு நாடு. ஆனால் ஈரான் அரபு நாடு அல்ல. ஈரானில் பாரசீக மொழியை பேசுகின்ற மக்களே வாழுகிறார்கள். அதே வேளை ஈராக்கிலும், ஈரானிலும் சியா முஸ்லீம்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் ஈராக்கில் சதாமும் அவருடைய சகாக்களும் சுன்னி முஸ்லீம்களாக இருந்தார்கள். அதாவது ஈராக்கில் சிறுபான்மையாக இருக்கின்ற சுன்னி முஸ்லீம்களே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள்.இது ஈரானில் ஆட்சியில் இருந்த சியா முஸ்லீம்களின் கண்களை உறுத்துவதாக இருந்தது. சதாமும் ஈராக்கில் உள்ள சியா முஸ்லீம்களை கலகம் செய்வதற்கு ஈரான் துண்டிவிடக்கூடிய அபாயத்தை உணர்ந்தவராக இருந்தார்.இவ்வாறு இரண்டு தேசங்களும் போர் செய்வதற்கு போதுமான காரணங்கள் நிறையவே இருந்தன. இதை விட ஏற்கனவே சொன்னது போன்று மேற்குலகின் நலன்களுக்கும் இந்த யுத்தம் தேவையாக இருந்தது.1980 செப்ரெம்பர் 22இல் ஈராக்கிய படைகள் ஈரானிற்குள் நுளைந்தன. குறிப்பிட்ட பகுதிகளை ஈராக்கிய படைகள் கைப்பற்றிக்கொண்டன. ஈராக்கிற்கு பல நாடுகள் உதவிபுரிந்தன. முதல் இரண்டு ஆண்டுகளும் ஈராக்கிற்கே சாதகமாக அமைந்தன. ஆனால் 1982ஆம் ஆண்டில் இருந்து ஈரானிய படைகள் மூர்க்கமாக திருப்பித் தாக்கத் தொடங்கின. ஈராக்கிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டெடுத்தன. ஈரானிய படைகள் முன்னேறியதை அடுத்து சதாம் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார். ஆனால் ஈரான் அதை ஏற்கவில்லை. ஈரான் ஈராக்கின் சில பகுதிகளுக்கும் முன்னேறியது. அத்துடன் ஈராக்கில் உள்ள சியா முஸ்லீம்களை புரட்சி செய்யுமாறு வெளிப்படையாக அறைகூவல் விடுத்தது. இதற்கிடையில் ஒன்றை சொல்ல வேண்டும். 1981இன் கடைசிகளில் சதாம் ஒரு அறிவித்தலை வெளியிட்டார். தான் சியா முஸ்லீமாக மாறுவதாக அறிவித்தார். ஆனால் இது சியா முஸ்லீம்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மாறாக சுன்னி முஸ்லீம்கள் மத்தியில் அதிருப்திகளை உருவாக்கின. அதே போன்று ஆரம்பகாலங்களில் சோசலிசம் பேசிய சதாம் பிற்காலத்தில் அமெரிக்காவுடனான யுத்தத்தின் போது மட்டும் இஸ்லாமை முன்னிறுத்த முயன்றார். சதாமின் இது போன்ற தடுமாற்றங்கள் அவரால் அனைத்துலக இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஆதரவை பெற முடியாது போனதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். 1982இல் சதாம் சியா முஸ்லீம்களின் புனித நகர் ஒன்றிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் "துயைல்" என்ற பகுதியில் சியா முஸ்லீம்களின் கொலை முயற்சிக்கு இலக்கானார். இதையடுத்து "துயைல்" பகுதி ஈராக்கிய படைகளின் கோரதாண்டவத்திற்கு உள்ளானது. அந்தக் கிராமத்தின் அனைத்து மக்களும் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 148 பேர் வீடு திரும்பவே இல்லை. இவர்களை கொலை செய்ததற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில்தான் சதாம் உசேன் தூக்கில் இடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் "துயைல்" சம்பவத்தை மிஞ்சுகின்ற படி சதாமின் படைகள் பல கொலைகளை நிகழ்த்தி உள்ளன. இதில் ஈரானுக்கும் குர்திஸ் மக்களுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட இராசயன தாக்குதல்கள் முக்கியமானவை. ஈராக் படைகள் கைப்பற்றியிருந்த ஈரானிய பகுதிகளை மீட்டெடுத்த ஈரானிய படைகள் ஈராக்கிற்குள்ளும் நுளைந்தன. ஈராக்கின் சில பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டன. இதையடுத்து தெற்கு ஈராக்கில் நிலைகொண்டிருந்த ஈரானிய படைகள் மீது ஈராக் இராசயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய படையினரும், ஈராக்கிய அப்பாவி மக்களும் எரிந்து போயினர். இந்த இராசயன ஆயுதங்களை தயாரிக்கும் முறையையும், தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் ஜேர்மனி வழங்கியதாக சொல்லப்படுகிறது. இராசயன தாக்குதல்களை சமாளிக்க முடியாது ஈரானிய படைகள் பின்வாங்கின. சர்வதேச சட்டங்களை மீறி தன்னுடைய சொந்த மக்களையும் ஆயிரக்கணக்கில் பலியெடுத்தபடி ஈராக் நடத்திய இந்தத் தாக்குதல் வெளியே கசிந்து விடாமல் மேற்குலகம் பார்த்துக் கொண்டது. ஈரான் இத் தாக்குதல் குறித்து பல முறை பல இடங்களில் முறைப்பாடு செய்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேற்குலக ஊடகங்களும் ஈராக்கின் இந்த கொடுரமான தாக்குதல்களை வெளிக்கொணர்வதற்கு பதிலாக ஈரானின் மனித உரிமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதின. ஈரானிய அரசு குழந்தைப் போராளிகளை போரில் ஈடுபடுத்துவதாக எழுதின. அப்பொழுது வயது குறைந்தவர்களும் ஈராக்கின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் தாங்களாகவே இணைந்து போராடினார்கள். ஆனால் மேற்குலக நாடுகள் "குழந்தை போராளிகள்" என்ற விடயத்தைத்தான் தூக்கிப் பிடித்தன. ஈராக் அரசு இராசயன ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி பெரிதாக எழுதுவதை தவிர்த்தன.ஆனால் ஈராக் படைகள் குர்திஸ் மக்கள் மீது இதே ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய பொழுது, செய்தி வெளியே வருவதை தடுக்க முடியவில்லை. இச் செய்தி கூட தற்செயலாகவே வெளியே வந்தது. தாக்குதல் நடந்த விபரம் தெரியாமலேயே அப் பகுதிக்கு விவரணப் படம் ஒன்றை தயாரிப்பதற்கு சென்ற வெளிநாட்டு படப்பிடிப்பு குழு ஒன்றின் மூலம் செய்தி வெளியே வந்த பொழுது உலகம் அதிர்ந்து போனது.ஆனால் அப்பொழுதும் இந்த மேற்குலக நாடுகள் ஒரு கேவலமான செயலை செய்தன.
(தொடரும்)
இப்பதிவு www.webeelam.com இருந்து தொகுக்கப்பட்டது. நன்றி..,