May 8, 2007

ஈழத்தமிழர் படுகொலைகள் -பாகம் 1

சிங்கள இனவெறியர்களால் கடந்த அரை நூற்றாண்டுகளாய் நடத்தப்பட்டு வரும் இன படுகொலைகளை வரிசைப்படுத்த எவராலும் இயலாது।கணக்கிலடங்கா எண்ணிக்கையே அதற்கு காரணம். ஆயினும் எம்மால் இயன்ற வரையிலான படுகொலை நிகழ்வுகளை சேர்த்து உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.


1956 -
இன்கினியாலாவில் 150 தமிழர் படுகொலை:
1940-
களில், வேளான்மை துறை அமைச்சராக இருந்தவர்,பெரும்பாலான தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் வேண்டுமென்றே சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தினார்.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில், கலோயா முன்னேற்ற திட்டம் என்ற பெயரிலும், திரிகோணமலை மாவட்டத்தில்,கண்டாலை மற்றும் ஆலை முன்னேற்ற திட்டம் என்ற பெயரிலும், சிங்கள குடியேற்றங்கள் நடந்தன. அவ்வாறு குடியேறியவர்களுக்கு பண உதவியும் தரப்பட்டது.அவர்கள் தமிழர்களை தாக்க தொடங்கினர்,அவர்களுக்கு (சிங்களர்களுக்கு)பாதுகாப்பாக போலீஸும் ராணுவமும் உதவின. அங்கு பௌத்த கோயில்கள் பெரிய மணிக்கூண்டு வைத்து கட்டப்பட்டன.இந்த மணிக்கூண்டு அடிக்கப் படும் போது அந்த சத்தம் எதுவரை கேட்கிறதோ அதுவரையிலான நிலங்கள் அனைத்தும் பௌத்த சிங்களர்களுக்கு சொந்தம் என்று காட்டுமிராண்டி சட்டத்தை அவர்களே உருவாக்கினார்கள்.இப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் தமிழர்களுக்கு சொந்தமானவை. 1956 ல் நடந்த பொது தேர்தலில் பண்டாரநாயகே வென்றவுடனே "சிங்களர் மட்டும்" என்ற சட்டத்தை பிறப்பித்தார்.அதை செய்வேன் என்று தேர்தல் அறிக்கை தந்ததாலே அவர் வெற்றி பெற்றார்.தமிழர்களுக்காக் இருந்த அரசியல் கட்சிகள் கூடி அமைதி முறையில் போராட முடிவெடுத்து 05/06/56 அன்று சத்தியாகிரக போராட்டத்தை கொழும்புவில் கடற்கரை நோக்கி அமைந்திருந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் தொடங்கினர்.
அனைத்து தமிழ் அரசியல் கட்சி தலைவர்களுடன்,உலக புகழ் பெற்ற தமிழ் ஆய்வாளரும்,தமிழ் புலமை பெற்றவருமான அருட் தந்தை.திரு.தனிநாயகம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.போராட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே சிங்கள வன்முறை கூட்டம் தாக்க ஆரம்பித்தது.கொழும்புவில் தமிழர்களின் வியாபார நிறுவனங்கள் குறிவைத்து சூரையாடப்பட்டன.இலங்கை தீவு முழுதும் வன்முறை மூண்டது. "அம்பாறை" மாவட்டத்தில் சமீபத்தில் குடியேற்றப்பட்ட சிங்களர்கள் தமிழர்களை கொல்லத் தொடங்கினர்.கரும்பு தோட்டத்திலும்,ஆலையிலும் பணி புரிந்த 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கரும்பு தோட்டங்கள் தீ வைக்கப்பட்டு அதில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் மட்டுமின்றி காயப்பட்டவர்களும் உயிரோடும் தீயில் வீசப்பட்டனர்.

இதுவே இலங்கை தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் பதிவு செய்யப்பட்ட படுகொலை சம்பவம் ஆகும்.இச்சம்பவத்தை "எமர்ஜென்ஸி 58" என்ற தன் நூலில் "டார்சி விட்டாச்சி" என்ற ஆசிரியர் "மாபாதக படுகொலை நிகழ்வு" என்று குறிப்பிட்டுள்ளார்.

1974 - தமிழ் ஆராய்ச்சி மாநாடு தாக்குதல் - 9 பேர் பலி.
யாழ்பாணத்தில், 1974 ஜனவரி 3-10 ல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்திட முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடந்தன। இம்மாநாடு நடந்திட கூடாது என்று யாழ்பாண மேயர் அரசாங்கத்தின் உத்திரவுடன் நிறைய தடங்கல்கள் செய்தார்।பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிய பல தமிழ் அறிஞர்கள் "விசா" எனப்படும் அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.மாநாட்டை எவ்வகையிலாவது நிறுத்திட விரும்பிய அரசு, தீவு முழுதும் வாழும் தமிழர்களின் ஈடுபாட்டை துடிப்பை தடுத்திட வழியில்லை என்ற நிலையில் கடைசி கட்டத்திலேயே அனுமதி தந்தது.ஆயினும் வெளிநாட்டு தமிழறிஞர்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதி தந்தது.
மாநாடு யாழ்பாணத்தில் நடப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி மாநாட்டு அமைப்பின் தலைவர் திரு.தம்பைய்யா தன் பதவியை ராஜினாமா செய்தார்.அதன் பின்பு பேராசிரியர் திரு.வித்யாநந்தன் தலைமை பொறுப்பேற்க மாநாடு திட்டமிட்டப்படி
3 ம் தேதி தொடங்கியது.யாழ்பாணம் முழுதும் தமிழர்கள் விழாக்கோலம் பூண செய்திருந்தனர்.
உற்சாகமும்
,துடிப்புமாய் இதுவரை இலங்கை மண்ணில் இதுபோல் தமிழ் மாநாடு நடந்ததில்லை என்று நிருபித்தார்கள் தமிழர்கள்.
மாநாட்டின் கடைசி நாள் (10 ஜனவரி 1974) நிகழ்வாக தமிழ்நாட்டில்
இருந்து வருகை புரிந்திருந்த பேராசிரியர் திரு.நைனா முகமது அவர்கள் தமிழ்மொழியின் சிறப்பு பற்றியும் தமிழர் கலாசாரம் பற்றியும் உரையாற்றிக் கொண்டிருந்த போது, யாழ்பாண காவல்துறை இணை ஆய்வாளர் சந்திரசேகர என்ற கொடூர மனம் கொண்ட அதிகாரியின் தலைமையில் திடீரென நுழைந்த காவல் படை, மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களை தாக்க தொடங்கியதுடன் துப்பாக்கியால் சுடவும் ஆரம்பித்தனர். விழா மேடையை சிதைத்தனர்
, முடிவில் தங்கள் சிங்கள இனவெறிக்கு சாட்சியாய் 9 தமிழர்களை கொன்றதுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்டோரை படுகாயப்படுத்தினர்.

அவ்வாறு ஒரு கொடிய நிகழ்வை நடத்திய காவல்துறை இணை ஆய்வாளர் சந்திரசேகர_வை பாராட்டி பதவி உயர்வு கொடுத்தார் அந்நாட்டின் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே.

1977 - இனப் படுகொலை
1977 ஜுலை மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் United National Party (UNP) கட்சி 140 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. ஆட்சியை இழந்த SLFP கட்சி வெறும் 8 இடங்களையே பெற்றது. தமிழர் பெரும் எண்ணிக்கையில் வாழும் இடங்களில் பல்வேறு தமிழ் கட்சிகள் 18 இடங்களை கைப்பற்றியது சிங்கள ஆதரவு கட்சிகளுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக யாழ்பாணத்தில் சிங்கள காவல்துறையினர்
, தமிழர் பயிலும் பள்ளிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரங்களுக்கு தமிழ் சிறுமிகளை உட்படுத்தினர்.அதை எதிர்த்த தமிழர்களை ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் அச்சுறுத்தினர்.அதனை தொடர்ந்து யாழ்பாணம்-கொழும்பு இடையிலான பயணிகள் வேக ரயில் வண்டி அனுராதபுரம் ரயில் நிலைய நிறுத்தத்தில் வைத்து தாக்கப்பட்டது.
இத்தாக்குதலை தொடர்ந்து தீவு முழுதும் தமிழர்கள் தாக்கப்பட்டனர் குறிப்பாக
, திரிகோணமலை,வவுனியா,ரத்மலானா,பதுல்லா,கொழும்பு, நகர தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.இக்கொடிய வன் தாக்குதல்களை கண்டித்து தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் எழுப்பினார்கள். ஆனால் பிரதமர் J.R.ஜெயவர்தனே நாட்டில் அமைதி நிலவுவதாகவும் தடை சட்டமோ,அவசர சட்டமோ கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்தகைய சட்டத்துடன் நாட்டை ஆள்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.

இச்சம்பவத்தை விசாரிக்க அரசாங்கமே, சான்சோனி கமிஷன் அமைத்தது. 1977 ல் தொடங்கிய விசாரணை 1980 ல் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில், 300 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் தாக்குதலுக்கு உள்ளாகினர் என்றும்,கத்தி,இரும்பு குழாய்கள்,மரக்கட்டைகள் கொண்டு இவர்கள் தாக்கப் பட்டுள்ளார்கள் என்றும் கூறியது. தன் அறிக்கையின் முடிவாய் கொல்லப்பட்டோர்க்கும்,தாக்கப்பட்டோர்க்கும் உரிய இழப்பு நிதி தரப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது.ஆனால் அவ்வாறு நிதி உதவி எதுவும் அரசாங்கத்தால் தரப்படவில்லை.

அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் நடத்திய விசாரணையில் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

1981 - இனக் கலவரம்
1981 பொதுத் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள இலங்கை அமைச்சர்களான காமினி திசநாயகே மற்றும் சிறில் மேத்யூ ஆகியோர் யாழ்பாணத்திற்க்கு வந்திருந்தனர்.அவர்களின் வருகைக்காக மிக பெரும் காவல் படையும் சிங்கள குண்டர் படையும் பாதுகாப்பு என்ற பெயரில் வந்திறங்கி அட்டூழியங்களை தொடங்கினர். அதன் விளைவாய் 31/05/81
அன்று
ஒரு சிங்கள காவல் துறை நபர் இறந்தார்.யாழ்பாணம் துரையப்பா மைதானத்தில் தங்கியிருந்த சிங்கள வெறியாளர்கள் உடனே விஸ்வரூபம் எடுக்க தொடங்கினர்.யாழ்பாணம் நாச்சியார் கோயிலுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
சிங்கள காவல் துறையினர் யாழ்பாணம் சந்தைக்குள் புகுந்து கடைகளுக்கு தீ வைத்தனர்.தமிழர்கள் வியாபாரம் செய்ய வைத்திருந்த சரக்குகள் அனைத்தும் தீக்கிரையாயின. தமிழ் கலாசார பிரதிபலிப்பாய் நிறுவப்பட்ட சிலைகள் வீழ்த்தப்பட்டன.
1974 _தமிழ் மாநாடு நிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்டிருந்த நினைவாலயம் தகர்க்கப்பட்டது. வெறியர் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்குள் புகுந்தது.நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் இல்லத்தை தேடினர்.அவர்கள் தாக்க வரும் செய்தி அறிந்து அவர் தன் குடும்பத்தாருடன் பின் பக்க வாயில் வழியே வெளியேறி தப்பித்தார்.

ஜுன் 1981_ல் திரு.யோகேஸ்வரன் "இந்தியா டுடே" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன் வீட்டை தீயிட்டவர்கள் சிங்களர்கள் தான் என்று கூறியுள்ளார்.

தொடரும்..,

No comments: