Apr 24, 2007

புலிக்கொடி ஏந்திய கனடா தமிழ் வீரன்

ஈழத் தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடனேயே நான் மைதானத்தில் உள்நுழைந்தேன் என்று அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞரான மயூரன் தெரிவித்துள்ளார்.

தாயக மண்ணிலிருந்து நான்கரை வயதில் கனடிய நாட்டுக்கு நான் வந்தேன்.

பொதுவில் துடுப்பாட்டாப் போட்டிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. கனடாவில் நான் இருப்பதால் கூடைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளைத்தான் அதிகம் பார்ப்பதுண்டு. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளை பார்க்கச் சென்றது என்பது எம்முடைய பிரச்சினை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்போதுதான் முதல் முறையாக துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கச் சென்றேன்.

எங்களுடைய மக்கள் எல்லோருக்கும் எங்கள் நாட்டில் நடைபெறுவது என்ன என்று தெரியும். அனைத்துலக மன்னிப்புச் சபையும் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியையொட்டி பரப்புரை மேற்கொண்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆகையால் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைக்கு ஆதரவாகவும் எமது பிரச்சனையை அனைத்துலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கருதி இந்த இளைஞராக இருப்பதால் நேரடி நடவடிக்கையை மேற்கொண்டேன்.

என்னுடைய நண்பர்களுடன் நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றேன்.

நாம் மேற்கொண்ட நடவடிக்கையானது முன்னரே திட்டமிட்டதுதான்.

அந்த மைதானத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகளெல்லாம் இருக்கின்றபோது எங்களுடைய நாட்டினது புலிக்கொடியும் அதாவது தமிழீழத் தேசியக் கொடியைக் கொண்டு போனால் என்ன மாதிரி விளைவை உண்டாக்கும்- பரபரப்பை ஏற்படுத்தும் என்று திட்டமிட்டுத்தான் இதனைச் செய்தோம்.

அவுஸ்திரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான போட்டியைத் தெரிவு செய்யக் காரணம் உண்டு.

சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு உண்டு. சிறிலங்காவின் அமைச்சரான கேகலிய ரம்புக்வெல, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கள் மக்களின் செயற்பாடுகளைத் தடுக்கப் பார்க்கிறார். எங்களுடைய போராட்டத்தைத் தடை செய்ய அவர் முயற்சித்து வருகிறார். ஆகையால்தான் தற்போது இந்தப் போட்டியை நாம் தெரிவு செய்தோம்.

எங்களுக்கு மைதானத்தின் எந்தப் பகுதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று வெளியிலிருந்து தெரியவில்லை. மைதானத்தின் பகுதியில் நகரக்கூடிய இடங்களும் இருந்தன.

மைதானத்தைச் சுற்றி மிகவும் வலுவான பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் சரியான நேரத்தையும் சரியான இடத்தையும் நாம் தெரிவு செய்தமையால்தான் எமது திட்டம் வெற்றி பெற்றது.

மைதானத்தில் சிறிலங்கா அணி நிற்க அவுஸ்திரேலிய அணி மட்டையெடுத்து ஆடும்போதுதான் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி நான் மைதானத்தில் இறங்கி பிட்ச் பகுதிக்குச் செல்ல தீர்மானித்தேன்.

ஆனால் மைதானத்தில் நின்றிருந்த சிறிலங்கா அணியினரோ அச்சத்துடன் இருந்தனர். அந்தப் பாதிப்பைவிட வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கருதினேன். அதற்கேற்ப பார்வையாளர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்கள் வரிசையில் இலங்கையர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எந்தப் பகுதியிலிருந்து உற்சாகமளித்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் மைதானத்தில் இறங்கும் வரை திட்டமிட்டதனை சரியாக முடிக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்தேன். மைதானத்தில் இறங்கிய பின்னர் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.

சிறிலங்கா அணியினர் அச்சத்துடனும் அவமானப்பட்ட நிலையிலுமாக அவர்கள் முகம் இருந்ததை நான் சரியாகப் பார்த்தேன்.

நான் மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியுடன் இறங்கிய உடனே அங்கிருந்த காவல்துறையினர் என் பின்னால் வந்தனர். அவர்கள் என்னை நோக்கி வந்தபோது அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரும் விதத்தில் நான் எனது கையை உயர்த்தினேன்.

இதனை நான் விளையாட்டுக்குச் செய்யவில்லை. பரப்புரைக்காகத்தான் செய்கிறேன் என்பதனை அனைத்துலக துடுப்பாட்டச் சபையினரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவர்களோடு ஒத்துழைத்தேன்.

நான் செய்தது ஒரு போராட்ட ரீதியான செயல்தான். விளையாட்டுக்காக பிழையாக நான் செயற்படவில்லை.

நான் மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபோது, முதலில் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். எங்கள் நாட்டில் இப்படியான பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அதனை வெளிப்படுத்தவே இத்தகைய செயற்பாடு மேற்கொண்டோம் என்றும் விளக்கம் அளித்தேன்.

மைதானத்திலிருந்த போதுதான் அனைத்துலக துடுப்பாட்டச் சபையினர் விசாரித்தனர்.

எந்த ஒரு பார்வையாளரும் மைதானத்தில் இறங்கக் கூடாது என்பதுதான் அந்த அதிகாரிகளின் சட்டம். என்னிடம் விசாரணை செய்த ஒவ்வொரு உயர் அதிகாரியிடமும் என்னுடைய மன்னிப்பைக் கூறி அத்துடன் எமது அரசியல் பிரச்சினையையும் நான் விளங்கப்படுத்தினேன். எதற்காக இந்தச் செயலை செய்தேன் என்றும் விளக்கினேன்.

மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கிருந்து புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

முதலில் என்னை குற்றவாளியாகக் கருதித்தான் 40 அல்லது 50 பேர் கொண்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர். என் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத்தான் அவர்கள் முயற்சித்தனர்.

ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் என்னிடம் விசாரித்த போதும் விளக்கம் கூறினேன். அதன் பின்னர் எனது சார்பில் கதைக்கத் தொடங்கினர்.

அதன்பின்னர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் இன்னொரு போட்டிக்கு நான் திரும்பவும் போய் இப்படியான ஒரு சம்பவம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி நடப்பதன் மூலமாக வெளிநாட்டினருக்கு மேற்கிந்திய தீவுகள் குறித்து பிழையான அபிப்பிராயம் வருமென கருதினர். ஆகையால் அதனை ஏற்று அந்நாட்டிலிருந்து வெளியேற இணங்கினேன்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டின் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.

கனடா நாட்டுக்கு நான் திரும்பியபோதும் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைகள் வரலாம். அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராக உள்ளேன்.

ஆனால் கனடா நாட்டினது சட்டத்தை நாம் சரியான முறையில் கையாண்டால் எங்களுக்கு எதுவித பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நான் மைதானத்திற்குச் சென்றேன்.

நான் மேற்கொண்ட நடவடிக்கையானது ஊடகங்களில் படங்களுடன் வெளியானதன் மூலம் எனது நோக்கம் நடந்தேறியிருப்பதால் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். எமக்கு மட்டுமல்ல தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.

நான் மேற்கொண்ட செயற்பாடு சரியானது என்று இளைஞர்கள் பலரும் தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு தங்களை அழைத்துச் செல்லாதது குறித்து கோபமடைந்தும் உள்ளனர்.

நாம் வெற்றி கிடைக்கும்வரை சிந்திக்க வேண்டும். நாங்கள் பெருந்தொகையில் திரண்டு போராட்டம் நடத்திய போதும் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய புதிய வடிவங்களினூடே தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.

எங்களுடைய தேசியத் தலைவரின் விருப்பத்தின்படி அதாவது எமது தேசியத் தலைவர் அவர்கள் ஒருமுறை, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் எழும்ப வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கேற்ப செயற்திட்டங்களையும் வடிவங்களையும் மாற்றி அனைத்து தமிழ் இளைஞர்களும் முன்வந்தால் நம் பிர்சினைக்கு விரைவில் நாம் தீர்வு காண்போம் என்றார் மயூரன்.

"தமிழ்நாதம் இணையதளத்திற்க்கு மயூரன் வழங்கிய நேர்காணல்"

No comments: