இலங்கை பேரினவாத அரசினால் மீண்டும் தமிழ் மக்கள் வேட்டையாடத் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் விஷயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற பிதற்றல்களாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் மத்திய அரசுடனான கடித அரசியல் கண்கட்டி வித்தைகளாலும் தமிழக மக்களே வெறுப்படைந்து போயுள்ளனர்.
எப்போதுமில்லாதவாறு தற்போது விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழக அரசு எடுத்து வரும் `தேவையற்ற' பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை கெடுபிடிகள், தேடுதல்கள் என்பவற்றால் தமிழகத்தில் யுத்தம் நடைபெறுவது போன்ற நிலையே இங்கு காணப்படுகின்றது.
இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து கொல்லப்படுகிறார்கள். காலையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் மாலையில் பிணமாக திரும்பி வருவதே தமிழக கடற்கரையோர கிராமங்களில் நிகழும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.
தமிழக மீனவரின் உயிரைப் பாதுகாக்க அவர்களின் ஜீவாதார பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத தமிழக அரசு, இலங்கை கடற்படையின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தமது மீனவர்களை அவர்களின் உடைமைகளை பாதுகாக்க முடியாத `தமிழக அரசு' இலங்கை கட்டுநாயக்க விமானத்தளம் மீது புலிகள் விமானத் தாக்குதல் நடத்தி விட்டார்கள் என்பதற்காக தமிழக கரையோரப் பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது தமிழக மக்களையே வருத்தமடைய வைத்துள்ளது.
தமது மீனவர்களுக்கு பாதுகாப்பை வழங்க மறுக்கும் தமிழக அரசு இலங்கை அரசு மீதும் அதன் கடற்படையினர் மீதும் மென் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.
ஆனால், விடுதலைப்புலிகள் தமது எல்லைக்குள் வந்து விடக் கூடாது என்பதற்காக கடற்பாதுகாப்பை அதிகரித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை எதிர்கொள்ளவென விமான எதிர்ப்பு பீரங்கிகளை பொருத்தி வைத்துக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளால் தமது நாட்டுக்கு எந்த விதப் பிரச்சினையும் ஏற்படாது என்பதனை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தமிழக,மத்திய அரசுகள் யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதென சாதாரண இந்திய தமிழனும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளான்.
இந்திய கடற்படையை தமது கடற்படையுடன் கூட்டுரோந்தில் ஈடுபட வைப்பதற்காக தமிழக மீனவர்களையே பலியெடுத்து இந்திய அரசை அடிபணிய வைக்க இலங்கை அரசு முயற்சிப்பது தமிழக, மத்திய அரசுகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் இது விடயத்தில் இலங்கையரசையும் அதன் கடற்படையையும் பாதுகாக்க முனைவது தமிழக மீனவர்களை மட்டுமன்றி தமிழக மக்களையே கொதிப்படைய வைத்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற அறிக்கைகளும் நழுவிச் செல்லும் நரித்தனமும் அவரும் ஒரு சாதாரண அரசியல் வாதியாகி விட்டாரோ என்ற கவலையை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி தமிழககத்திலுள்ளவர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையுடன் கூட்டுரோந்துக்கு இணங்கியுள்ளதாக ஊடகங்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டியை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். கூட்டுரோந்து அவசியமென வலியுறுத்திய கருணாநிதி அதனை பகிரங்கமாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதனை தமிழக ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து ஒளி, ஒலி பரப்பின.
ஆனால், இதன் பின்னர் தமிழகத்தில் கருணாநிதிக்கு ஏற்பட்ட எதிர்ப்பை அவரே எதிர்பார்க்கவில்லை. வைகோ., அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், திருமாளவன், விஜயகாந்த் என பல கட்சியினரும் கருணாநிதியின் அறிவிப்புக்கெதிராக போர்க் கொடி தூக்கிய போது தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட கருணாநிதி அவசர அவசரமாக மறுநாள் எலியும் தவளையும் கதை கூறி இலங்கை ,இந்திய கடற்படையின் கூட்டுரோந்தில் தமக்கு இணக்கமில்லை எனத் தெரிவித்து தப்பித்துக் கொள்ள முயன்றார்.
ஆனாலும், முதலில் யாருடைய வற்புறுத்தலுக்காக இலங்கை -இந்திய கடற்படைக் கூட்டு ரோந்துக்கு இணக்கம் தெரிவித்தார் என்பதை அவர் வெளியிடவில்லை. அத்துடன், ஈழத்தமிழர் விஷயத்தில் தான் அக்கறை உள்ளவன் என்பதை காட்டிக் கொள்வதற்காக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் முட்டாள்களாக்கவும் கலைஞர் முயற்சிப்பது அவருடைய 50 வருட அரசியல் வரலாற்றில் விரும்பப்படாத பக்கங்களாகவே இருக்குமென்கின்றனர் சில மூத்த அரசியல்வாதிகள்.
தமிழக மீனவர் பிரச்சினைக்கும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டுமென கலைஞர் உண்மையில் நினைத்தால் அது அவருக்கு மிகவும் சாதாரண விடயம். மத்திய அரசுக்கு கலைஞர் சிறு அழுத்தம் கொடுத்தாலே போதும் . அனைத்தும் நன்றாகவே நடக்கும். ஆனால், கலைஞர் ஏனோ இவ்விடயங்களில் நழுவிச் செல்லும் கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கின்றார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக தான் செயற்பட்டால் அது ஜெயலலிதாவுக்கு பிரசார ஆயுதமாக பயன்பட்டு விடுமோ என கலைஞர் அச்சப்படுகிறார்.
தமிழகத்தின் செய்திதாள்களை தற்போது அதிகளவு ஆக்கிரமித்திருப்பது இரும்புக் குண்டு கடத்தல் விவகாரமாகவேயுள்ளது. தினமும் இரும்புக் குண்டுகள் மீட்பு, சந்தேக நபர்கள் கைது என்ற செய்திகளே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்சம்பவங்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர். இரும்புக் குண்டுகளை கடத்தி புலிகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக கூறப்படுகின்றது.
இரும்புக் குண்டுகள் கடத்தலுடன் தம்மை தொடர்பு படுத்தியதை மறுத்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் `நாம் தற்போது இரும்புக் குண்டுகளில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிலையை கடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. தற்போது நவீன தொழில்நுட்ப யுகத்தில் நாம் இருப்பதால் எமக்கு இரும்புக்குண்டுகள் தேவையில்லையெனக் கூறியுள்ளதுடன் தம்மிடம் அளவுக்கதிகமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதால் இரும்புக் குண்டுகளை கடத்த வேண்டிய தேவை தமக்கில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையும் அதுதான். இந்த இரும்புக் குண்டு (போல்ஸ்) கடத்தல்களுடன் கொழும்பு நகர வாகன உதிரிப் பாக விற்பனை வியாபாரிகளே தொடர்புபட்டுள்ளதாக தெரியவருகிறது. சட்டத்திற்குட்பட்டு இந்த இரும்புக் குண்டுகளை கொண்டு வந்தால் அதிக வரி செலுத்த வேண்டுமென்பதால் கடல்வழியாக இவற்றை கடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தமிழகத்திலேயே பலருக்கும் தெரிந்திருந்தும் ஊடகங்கள் மட்டும் புலிகளுடன் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இதற்கும் சில காரணங்களுண்டு. பரபரப்பான சம்பவங்களை மிகைப்படுத்தி ஊடகங்கள் வெளியிட்டு வருவதாலும் அந்த விடயங்களுடன் சம்பந்தப்பட்டால் பிரபலமாகிவிடலாமென நினைக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுமே இந்த இரும்புக் குண்டு கடத்தல்களுடன் விடுதலைப் புலிகளை தொடர்பு படுத்திவிட்டு தமது புகைப்படங்களையும் பெயர்களையும் செய்திதாள்களில் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தாம் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்களல்ல வியாபாரிகளென பிடிபட்டவர்கள் தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்தாது அவர்களுக்கு புலி முத்திரை குத்திவிட்டு செய்திதாள்களுக்கு, பெரிய கடத்தலை முறியடித்து புலிகளை கைது செய்துள்ளதாக பேட்டியளிக்கின்றனர்.
இவ்வாறே பல சம்பவங்கள் தேவையற்ற வகையில் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டு வருவதால் தமிழகத்தில் புலிகள் பெருகிவிட்டார்களென்ற எண்ணம் சில ஈழத்தமிழர் விரோத கட்சிகளுக்கு ஏற்படுவதால் இதனை அவர்கள் தமது அரசியலுக்கு பிரசார ஆயுதமாக பாவிக்கின்றனர்.
புலிகளின் விமானத் தாக்குதலும் தமிழக மக்களின் உணர்வும்
கொழும்பு, கட்டுநாயக்காவிலுள்ள இலங்கை விமானப்படையின் தளம் மீது விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் ஈழத்தமிழர்களைப் போன்றே தமிழக மக்களிடமும் ஒரு எழுச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
26 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விமானத் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தின் அன்றைய தின மாலைப் பத்திரிகைகளான தமிழ்முரசு, மாலைமலர், மாலைமுரசு உட்பட பல ஊடகங்கள் உணர்ச்சிகர தலைப்புகளுடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது விமான `பைலட்டுகள்' தாக்குதலுக்கு புறப்படும் விமானம் போன்ற படங்களுடன் முன் பக்கத்தில் பிரசுரித்திருந்ததுடன் இலங்கையரசின் ஆட்டம் இத்துடன் முடிந்தது என்பது போன்ற செய்திகளையும் வெளியிட்டிருந்தன.
அன்றைய தினம் அங்குள்ள பத்திரிகை விற்பனை நிலையங்களில் குறிப்பிட்ட பத்திரிகைகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாகவும் இவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது கடைகளில் பத்திரிகைகள் விற்பனையாகவில்லையெனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதைவிட செல்லிடப் பேசிகளூடாகவும் விமானத் தாக்குதல் தொடர்பான செய்திகளை பரிமாறி வாழ்த்துக்களை பலர் தெரிவித்துக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. பல அரசியல் தலைவர்கள் கூட இத்தாக்குதல் குறித்து பகிரங்க கருத்துக்களை வெளியிடாத போதும் தமக்கு நெருக்கமானவர்களிடம் புலிகளின் விமானப்படை தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் புலிகளின் விமானத் தாக்குதலையடுத்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தான் முதலமைச்சர் கருணாநிதி மீது பலதரப்பட்ட மக்களையும் விசனமடைய வைத்துள்ளன. இது குறித்து வெளிப்படையாகவே ஊடகங்களில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் நாட்டை பொறுத்தவரை ஈழத்தமிழருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பெருகிவரும் ஆதரவைக் கண்டு அச்சமடையும் மத்திய அரசு முதலமைச்சர் கருணாநிதிக்கு கொடுத்து வரும் அழுத்தம் காரணமாகவே தற்போதைய பரபரப்பு நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுவதுடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவார்களென்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க புலிகள் பெரும் பிரயத்தனம் செய்து வரும் நிலையில் அதனைக் கெடுப்பதற்கென்றே பல சக்திகளும் பல ரூபங்களில் செயற்பட்டு வருகின்றன. இரும்புக் குண்டு கடத்தல், தமிழக மீனவர்களை புலிகளே சுட்டுக் கொல்கிறார்கள் என்ற பிரசுரம், தமிழகத்தில் வன்முறை அதிகரிப்பு போன்ற நாடகங்கள் இந்த சதியின் சில பகுதிகளேயாகும்.
இதேவேளை, இந்தியத் தமிழர்களையே இனவெறியுடன் தமது எதிரிகளாகப் பார்க்கும் மலையாள பெருச்சாளிகள் (உதாரணம்:சிவசங்கர் மேனன்) இந்தியப் பிரதமரின் ஆலோசகர்களாக, வெளியுறவு செயலர்களாக பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் வரை ஈழத்தமிழர் பிரச்சினையில் ஈழத்தமிழருக்கு சார்பான எந்த முடிவையும் இந்திய மத்திய அரசு எடுக்காதென தெரிவிக்கும் தமிழகத்தின் மூத்த அரசியல் வாதிகள், தமிழக அரசும் முதுகெலும்பில்லாது இரண்டுங்கெட்டான் நிலையிலிருப்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது என்கின்றனர்.
அரசியல் வரலாற்றில் பொன்விழாவை கொண்டாடும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி சாதாரண அரசியலுக்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர் பிரச்சினையை அணுக வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பமாகும்.