Mar 5, 2007

சதாம் உசேன் ஒரு வரலாறு! (பாகம் 3)

சதாம் உசேன் ஒரு வரலாறு! (பாகம் 3)

16 மார்ச் 1988 அன்று உலகை அதிர வைத்த அந்த சம்பவம் நடந்தது. வட ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் வாழுகின்ற ஹலப்ஜா என்ற நகரத்தின் மீது ஈராக்கிய யுத்த விமானங்கள் நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டன. குழந்தைகள், பெண்கள் உட்பட 5.000இற்கும் மேற்பட்டோர் கருகி இறந்து போனார்கள். 10.000இற்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி, அங்கவீனர்கள் ஆனார்கள். பாதிக்கப்பட்டவர்களிலும் பலர் நச்சுவாயுவின் தாக்கத்தினால் பின்பு மெது மெதுவாக சித்திரவதைப்பட்டு இறந்தார்கள். சதாம் உசேன் செய்த குற்றங்களில் மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடிய குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைந்தது. நச்சுவாயுத் தாக்குதல் குறித்த செய்தி வெளியில் கசிந்ததும், மேற்குலக நாடுகள் சதாம் உசேனை காப்பதற்கு முனைந்தன. பழியைத் தூக்கி ஈரான் மீது போட்டன.இந்த தாக்குதல் குறித்து ஆராய்வதற்கு அமெரிக்கா ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. அந்த விசாரணைக் கமிஷனும் சொல்லிக் கொடுத்தது போன்று ஈரான்தான் குர்திஸ் மக்கள் மீது நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டது என்று அறிக்கை கொடுத்தது. நச்சுவாயுத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் ஈராக்கிடம் இல்லை என்றும், அது ஈரானிடமே இருக்கிறது என்றும் அமெரிக்க உளவு நிறுவனமாகிய சிஐஏயும் தகவல்களை பரப்பி இருந்தது. தாக்குதல் நடந்த பொழுது ஹலப்ஜாவில் ஈராக் இராணுவம் நிலைகொண்டிருந்ததாகவும், ஆகவே ஈரான் இராணுவமே ஈராக் படைகளுக்கு எதிராக இந்த தாக்குதலை மேற்கொண்டன என்று இன்னும் ஒரு பொய்யான கதையும் மேற்குலக ஊடகங்களில் வலம் வந்தன. ஆனால் உண்மை வெளிவருவதை தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஈராக்தான் நச்சுவாயுத் தாக்குதலை நடத்தியது என்பது ஓரளவு உறுதியாகி விட்டது. அப்பொழுதும் மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஈராக்கை நியாயப்படுத்துகின்ற வேலையத்தான் செய்தன. ஈராக் படைகள் ஈரான் படைகள் மீது தாக்குதலை நடத்துகின்ற பொழுது, குர்திஸ் மக்கள் இடையில் அகப்பட்டு விட்டனர் என்று மேற்குலக நாடுகள் கூறத்தலைப்பட்டன. அமெரிக்கா குர்திஸ் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடிய தாக்குதலில் ஏற்பட்ட அழிவை "இலக்கு தவிர்ந்த பாதிப்பு" என்ற அர்த்தத்தில் கொலெற்றல் டமேஜ் (collateral damage) என்றது. ஒரு இராணுவ இலக்கு ஒன்று தாக்கப்படும் பொழுது, இராணுவ இலக்கு சாராத மற்றைய பாதிப்புக்களை கொலேற்றல் டமேஜ் என்று சொல்வார்கள். உதாரணமாக இராணு அணி மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்படுகின்ற பொழுது, திடீரென்று வருகின்று பொதுமக்களின் வாகனம் ஒன்றும் எதிர்பாராத விதமாக அதில் சிக்கிக்கொண்டால், அந்த பாதிப்பை கொலேற்றல் டமேஜ் என்று சொல்லலாம். சர்வதேச சட்டங்களின்படி கொலேற்றல் டமேஜ் ஒரு யுத்தக் குற்றமாக கருதப்படுவது இல்லை.இந்தப் பதத்தினைக் கொண்டு மேற்குலக நாடுகள் ஈராக்கின் பொதுமக்கள் மீதான நச்சுவாயுத் தாக்குதல்களையும் மற்றைய படுகொலைகளையும் நியாயப்படுத்தின. ஆயினும் ஈராக் மீது பல இடங்களில் இருந்து கடும் கண்டனங்கள் கிளம்பின. அமெரிக்க செனட் சபையில் "இனப்படுகொலைகள் தடுப்புச் சட்டம்" (Prevention of Genocide Act) தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால், அமெரிக்க அரசு ஈராக் மீது பல தடைகளை விதிக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான "றொனல்ட் றீகன்" தனக்கிருந்த "வீட்டோ" அதிகாரத்தை பயன்படுத்தி, அந்தச் சட்டம் அமுலுக்கு வராது தடை செய்தார். இதன் மூலம் அமெரிக்க அரசு வெளிப்படையாக சதாம் உசேன் நடத்திய படுகொலைகளை ஆதரித்து நின்றது தெளிவாகிறது.இவ்வாறு சதாம் உசேன் செய்த அனைத்துப் படுகொலைகளுக்கு ஊக்கமும் ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்த அமெரிக்காவும் மற்றைய மேற்குலக நாடுகளும் இன்று சதாம் உசேனை மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்று சொல்லி படுகொலை செய்து விட்டன.அத்துடன் கடந்த 15.01.07 அன்று சதாமின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஈராக்கின் புலனாய்வுத்துறை அதிகாரியுமான பர்ஸான் அல் திக்ரிதியும், ஈராக்கின் தலைமை நீதிபதியான அவாத் அல் பந்தரும் தூக்கில் இடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள். இதில் பர்ஸானின் தலை தூக்கில் இடப்பட்டு கீழ் நோக்கி வேகமாக இறங்குகின்ற பொழுது, துண்டிக்கப்பட்டும் விட்டது. இவர்களும் சதாமின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள்.சதாம் உட்பட இந்த மூவரும் மனித குலத்திற்கு எதிரான பல குற்றங்களை இழைத்தவர்கள்தான். மிகப் பெரும் குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைகிறது. அத்துடன் ஈரான் மீதும் பல முறை நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இந்தக் குற்றங்களுக்காக தண்டிக்கப்படவில்லை. அவைகள் குறித்த விசாரணைகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், துஜைல் நகரில் 143 சியா முஸ்லீம்களை படுகொலை செய்ததற்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் மற்றைய குற்றங்கள் பற்றி விசாரணை வரும் முன்னே அவசரம் அவசரமாக படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்.இதற்கு காரணம் இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போன்று சதாமின் ஆட்சியில் நடந்த படுகொலைகள் வெளியில் தெரிய வந்த பொழுது, சதாம் உசேனுக்கு வக்காலத்து வாங்குகின்ற வேலைகளையே மேற்குலகம் செய்தது. சதாமிற்காக பொய்யான ஆதாரங்களையும் சோடித்தன. உதாரணமாக உலகம் அறிந்திருந்த ஹலப்ஜா தாக்குதலுக்காக சதாம் மீது விசாரணை நடைபெற்றிருந்தால், அதில் வெளிவருகின்ற பல செய்திகள் மேற்குலகிற்கு பெரும் சங்கடங்களை உருவாக்கி இருக்கும்.ஆனால் துயைல் நகரில் நடந்த படுகொலைகள் உலகின் கவனத்திற்கு வரவில்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின்பே இந்தப் படுகொலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஆகவே இந்தப் படுகொலைகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கவில்லை. துயைல் படுகொலைகளக்கு சதாமை தண்டிப்பதில் அமெரிக்காவிற்கு எந்த சங்கடமும் இல்லை.சந்தேகத்திற்கு இடமின்றி சதாம் ஒரு கொடுங்கோல் ஆட்சியே புரிந்தார். ஆனால் சதாம் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படத் தொடங்கிய பிற்பாடு உலகின் பல பாகங்களில் அவரைப் பற்றிய ஒரு புதிய மதிப்பீடு உருவாகிவிட்டது. அதில் தவறும் இல்லை.இன்றைக்கு உலகின் சமாதானத்திற்கும், பல நாடுகளின் இறைமைக்கும், தேசிய இனங்களில் விடுதலைக்கும் அமெரிக்கா மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம் என்ற பெயரில் காலனித்துவத்தை புதிய முறையில் நடைமுறைப்படுத்துகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவை எதிர்க்கத் துணிகின்று யாரும் பெரும்பாலான உலக மக்களால் வீரர்களாக போற்றப்படுவது என்பது இயல்பான ஒரு விடயம். மக்களால் தூக்கி எறியப்பட்டிருந்தால், சதாம் ஒரு கொடுங்கோலனாக மடிந்திருப்பார். அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டதால், அவர் ஒரு வீரராக மடிந்திருக்கிறார்.ஆனால் சதாமை படுகொலை செய்தது என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்று சொல்லிக்கொண்டு அமெரிக்கா நடத்துகின்ற யுத்தத்தில் சதாம் மீதான படுகொலை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது?

(தொடரும்)

இப்பதிவு www.webeelam.com இருந்து தொகுக்கப்பட்டது. நன்றி..,

No comments: