இவர்களிடம் அல்ல.., "மக்களிடம்"
இக்கட்டுரை என் தமிழின மக்களின் நலனுக்காய் எழுதி வரும் அண்ணன் சபேசன் அவர்களின் (www.webeelam.net) "ரஜினிகாந்திற்க்கு ஒரு கடிதம்" என்ற கட்டுரையை படித்த பின் எனக்குள் தோன்றிய எண்ண உந்துதலால் எழுதப்பட்டதாகும்.
நானும் ரஜினியின் ரசிகனாய் இருந்தவன். ரசனை என்பது தவறல்ல ஆனால் சிந்தனையை மழுங்க செய்யும் ரசனை மயக்கம் தான் தவறு. திரையில் அநீதியை கண்டு பொங்கி எதிரிகளை பொசுக்கும் "கதாநாயகன்கள்" நிஜ வாழ்வில் அத்தனை வீரம் செறிந்தவர்களாய் இருப்பார்களா? என்பதை சிந்திக்க வேண்டும். அப்படி சிந்த்திப்பவர்கள் "கதாநாயகன்கள்" தங்களின் வாழ்வுரிமை போராட்ட களத்திற்க்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு களத்திற்க்கு வரும் மனநிலையில் சிலர் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவ்வாறான களத்திற்கு வர துணிவற்றர்களை பட்டியலிட்டால் அதில் தமிழ் சினிமாவின் பெருன்பான்மை "கதாநாயகன்கள்" அடங்குவர்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று ஒரு தமிழறிஞர் சொன்னார் அவர் சொன்னது அவர் ஆற்றிய "தமிழ் தொண்டு" என்கிற கடமையை பற்றியது.
இவ்வாக்கித்தை அனைவரும் பயன்படுத்தலாம் ஆனால் அது தருகிற அர்த்தம் வெவ்வேறு மனிதர்களின் செயல்பாடுகளில் வேறுபடுகிறது. வேசி கூட இவ்வாக்கியத்தை உபயோகிக்கலாம் ஆனால் அவளின் "கடமை" தன் உடலை மூலதனமாக்குவதே என்ற அர்த்தத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். கூலிக்கு கொலை செய்பவன் இவ்வாக்கியம் சொன்னால் அவனின் "கடமை" கொலை செய்வதே என்ற அர்த்தத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். இது போலத்தான் சினிமா மனிதர்களும். ஆனால் அந்த நிழல் உலகிலும் சில நிஜ மனிதர்கள் இருக்கதான் செய்கிறார்கள். நாம் தான் அவர்களை சரியாய் இனம் காணாது குழம்பி போய் உள்ளோம். சினிமா என்கிற நிழலுலகம் நம்மை கனவு காண வைக்கிறது. அது அதனுடைய தவறில்லை ஆனால் அந்த கனவில் இருந்து மீளாமல் அதிலேயே மூழ்கி மூச்சைடைத்து போவது தான் தவறு.
என் வாழ்நாளில் நான் ரஜினி_யை விரும்பியதை போல் வேறு எந்த சினிமா நடிகனையும் விரும்பியதில்லை. அதில் தவறில்லை ஆனால் நான் அவரை விரும்பியதாலேயே அவர் என் விருப்பங்களை நிறைவேற்றுவார் என்று நான் நினைத்திருந்து தான் தவறு. நான் விரும்பி இருக்க வேண்டியது சினிமா ரஜினியை தான் ஆனால் அதற்கும் மேலாய் தனி மனிதனான ரஜினியை நான் மட்டுமல்ல ஆயிரமாயிரம் பேர் விரும்பியதன் பலனாய் "ஏமாற்றங்கள்" எங்களுக்கு பரிசளிக்கப்பட்டன. இதற்கு ரஜினி காரணமா என்பதை விவாதிப்பதை விட 'நானே" காரணம் என்கிற உண்மையை நான் அறிந்து கொண்டேன் அதனால் தான் இப்போதெல்லாம் "நிழல் நாயகர்களின்" வில்லுபாட்டுகளுக்கு நான் செவி சாய்ப்பதுமில்லை அவர்கள் நமக்கான உரிமை போராட்டங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பதுமில்லை.
ரஜினி என்கிற மனிதர் ஒரு புதிராகவே அவர் சார்ந்தவர்களால் அறிய படுகிறார் என்பது உண்மை. அந்த உண்மையை தமிழ் சமூகத்தாலும் அறியப்படுகிற சந்தர்ப்பத்தை "காலம்" பலமுறை தந்துள்ளது. காவிரிநீர் பிரசினையில் இவரின் தன்னிச்சையான உண்ணாவிரத போராட்டத்தின் மூலமாய் இவரின் செய்கை வரவேற்கவும்பட்டது விமர்சிக்கவும் பட்டது. ஒகனேக்கல் போராட்டத்தில் கன்னடனை அடித்தாலும் தகும் என்ற போது வரவேற்கப்பட்ட ரஜினி ஒரே ஆண்டில் அந்தர்பல்டி அடித்த போது விமர்சிக்கவும் பட்டார். ஈழப் போர் நிறுத்தம் வேண்டிய உண்ணாவிரத மேடையில் ஈழத்தமிழர்களின் ஆயுத போராட்டம் சரியென்று சொன்னதோடு நில்லாது புலிகளை வெல்ல முடியாத சிங்கள அரசை கிண்டல் செய்ததன் மூலமாய் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நின்றார்.
தன்னலம் கருதவில்லை பெரிதாய் பணம் செய்திடும் எண்ணமுமில்லை ஆனால் இனநலம் நாடி நிற்கும் துணிவிருந்த அமீர் மற்றும் சீமான் இருவருக்கும் இந்த அரசு தந்த பரிசு "சூப்பர் ஸ்டார்" மற்றும் "உலக நாயகன்"_களின் நினைவுகளில் நின்று கொண்டிருக்க தானே செய்யும்.
"எங்களால் இவ்வளவு தான் முடியும் இதற்கும் மேல் வெறென்ன செய்ய" என்று சட்டசபையில் தமிழர்களின் ஒட்டுகளை பெற்று தன்னை "தமிழின தலைவர்" என்று பறைச்சாற்றி கொண்டவர்களே டெல்லி பட்டணத்தின் அடிமைகளாய் மாறி ஈழப்போரை நிறுத்திட இயலாத பக்கவாதம் வந்தவர்களாய் மாறிப்போய்விட்ட பின் இந்த நிழல் நாயகர்களை நோக்கி நம் கைகளை நீட்டுவதால் எப்பயனும் உண்டாக போவதில்லை.
இனப்பற்றில் தன் அடியொற்றி நடக்கிறார் சீமான் என்றார் கருணாநிதி. அதே கருணாநிதி_யை மகிழ்விக்க வை.கோ இருந்த மேடையில் நாமும் இருக்கிறோமே இதை கருணாநிதி தவறாய் நினைத்து விடுவாரோ என்ற எண்ணத்தில் நாம் யாருடன் மேடையில் இருக்கிறோம் என்கிற நிலையை கூட கொஞ்சம் மறந்து "கலைஞர் கலைஞர்" என்று பேச வந்த தலைப்பிற்க்கு சம்பந்தமில்லா பேச்சை அரங்கேற்றி கருணாநிதியின் மனதை குளிர வைத்தவர் அமீர். இவ்வாறாக கருணாநிதியை நம்பிய, விரும்பிய சீமான் அமீர் இருவரும் ஈழப்போர் நிறுத்தம் வேண்டி சென்னையில் தொடங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் மழையில் நனைந்தவாறு நின்று கொண்டிருந்த வேளையில் "தமிழின தலைவர்" காரிலே பவனி வருகிறார். நம்பியவர்கள் கொண்ட பரவசம் போல் இந்த சீமானும்,அமீரும் கூட பரவசமடைகிறார்கள். இந்த சகுனி அவர்களை கடைகண்னால் நோக்கி ஒரு சிரிப்பையும் தந்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். அதன் பிறகு அன்றைய இரவிலேயே தன் கீழே உள்ள காவல்துறைக்கு இந்த "தமிழின தலைவர்" கட்டளையிடுகிறார் இந்த இருவரையும் கைது செய்ய வேண்டி. மாலையில் இந்த தலைவன் உதிர்த்த சிரிப்பின் அர்த்ததிற்கான விடையை சீமானும் அமீரும் இரவில் உணர்ந்து கொண்டார்கள். தன்னோடு நின்றவர்களுக்கு விஷம் தந்த மனிதன் எதிரிகளுக்கு மட்டும் அமிர்தம் தருவான் என்பது நம்ப கூடியதா?
ஒகனேக்கல் பிரசினையில் சினிமா துறையினரை தூண்டி விட்டு போராட செய்து "ரஜினியை கர்ஜிக்க" வைத்த நிகழ்வுகளுக்கு பின்னணியில் கருணாநிதி இருந்தார் என்பது உண்மை. அதனால் தான் ரஜினியின் கர்ஜனை விசுவரூபமெடுத்தது ஆனால் அதற்கடுத்த நாட்களில் "இத்தாலி பிட்ஸா"_வின் மேல் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மோகத்தை போலவே "இத்தாலியின் மேதையும் இந்தியாவின் நவீன யுக சிற்பியுமான" சோனியா அம்மையார் மேல் (மு.க_விற்கும் அம்மையாராம்) கொண்டிருந்த கூட்டணி பக்தியால் கர்நாடக தேர்தலையொட்டி திட்டத்தை தள்ளி வைக்கிறேன் என்று கருணாநிதி பல்டி அடித்தார். அவர் அடித்த பல்டியால் ரஜினியின் மூக்கு தான் உடைப்பட்டது. இந்தியாவிலேயே வேறு மாநில தேர்தலையொட்டி தன் மாநிலத்தின் திட்டத்தின் ஒத்தி வைத்த ஒரே முதலைமைச்சர் கருணாநிதி மட்டுமே.
எனவே ஈழத்திற்க்கான விடிவு என்பது மக்களின் கைகளில் தானே அன்றி "தமிழின தலைவர்கள்" சூப்பர் ஸ்டார்கள்" கைகளில் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் தோல்வியடைந்ததுண்டு. இயக்கங்களின் போராட்டங்கள் தோல்வியடைந்ததுண்டு. அவ்வளவு ஏன் ராணுவங்களின் போர் நடவடிக்கைகள் கூட தோல்வியடைந்ததுண்டு. ஆனால் சரித்திரத்தில் தோல்வி என்பதை கண்டிராத போராட்டங்கள் உண்டென்று சொன்னால் அவை "மக்களின் புரட்சி போராட்டங்கள்" மட்டுமே.
ஈழம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழினமும் இனி காண வேண்டியது இத்தகைய "புரட்சி போராட்டங்கள்" தான். களம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. காட்சி நம் மனதினுள்ளே புதைந்து கிடக்கிறது இனி எதிரியின் வீழ்ச்சி மட்டுமே மிச்சம். "இனம் கூடி எதிரியை வீழ்த்திடுவோம், நம் மண்ணுக்கு தமிழீழம் என்கிற மகுடம் சூட்டிடுவோம்"