Apr 19, 2009

அழகான மரணங்கள் குறித்து....,

அழகான மரணம் என்பது எப்படி இருக்கும். அது உண்மையில் நமக்கும் வாய்க்குமா? என்று யோசித்த போது அழகான மரணமென்பது அரசு அதிகாரத்தில் இருக்கும் செல்வாக்குப் பெற்ற மனிதர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அரசு மரியாதையுடன், போலிஸ்காரன் துப்பாக்கியால் சுட, மெரீனா பீச்சில் ஒரு பெரிய இடத்தை ஆகரமித்துக் கொண்டு காலம் முழுக்க கிடப்பதுதான் அழகான மரணமோ என்றெல்லாம் யோசித்த போது சில பிரபலங்களின் மரணம் குறித்து சிந்தித்துப் பார்த்தேன்.

கிட்னி பாழாகி முத்திரக் கட்டுப்பாடு இல்லாமல், செல்லும் இடமெல்லாம் மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு இந்த அடிமைப்பட்ட தமிழ் மக்களுக்காக அலைந்த தந்தை பெரியார் கடைசி வரை தன் உடல் பலவீனம் குறித்து வருந்தியதில்லை. மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன் கூட தான் கொடுத்த ஒரு நேர்காணலில் ‘‘முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் படிப்பேன் எழுதுவேன்.ஆனால் இப்போது படிக்க கஷ்டமாக இருக்கிறது. எழுத சலிப்பாக இருக்கிறது யாராவது எழுதிக் கேட்டால் எழுதி தருவேன்.அத்துடன் முன்புமாதிரி மூளை தெளிவாக இல்லை கஷ்டப்பட்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது.முன்பெல்லாம் ஒன்றை பற்றி யோசித்தால் தொடர்ச்சியாக வரும் ஆனால் இப்பொழுது நினைவாற்றல் குறைந்து வருகிறது.’’என்றபடி ‘‘நான் ரொம்ப சீரியசாக இருக்கிறேன்.’’ என்று சொல்லிவிட்டு அப்படியே பின்னால் திரும்பி ‘‘சீரியஸ்னா என்னப்பா? என்று தன் சகாக்களிடம் கிணடலடிக்கிறார். தந்தை பெரியார்.பேசியது போலவே மரணம் குறித்த சலிப்பில்லாமல் அவர் இறந்து போகிறார். நிம்மதியான மரணம் தந்தை பெரியாருடையது. இன்று தந்தை பெரியார் உலகெங்கிலும் கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘‘நீங்கள் என்னை சுட்டுக் கொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உயிரோடு பிடிபட்டிருக்கக் கூடாது. இந்தத் தோல்வி புரட்சியின் தோல்வி அல்ல புரட்சி எப்படியும் வெல்லும் என பிடலிடம் சொல்லுங்கள்.அலெய்டாவிடம் இதை மறந்து விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்கள். சுடும் போது சரியாக குறிபார்த்துச் சுடுங்கள்’’ என்றபடி மரணத்தை எதிர் நோக்க அவன் அமெரிக்கப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போது நாம் பார்க்கிற படங்களில் சே சிரித்த முகத்தோடு கண்களைத் திறந்து உலகத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.ஒரு பிணத்துக்கு என்ன மரியாதை கொடுக்கப் படவேண்டுமோ அது சேவுக்கு வழங்கப்பட வில்லை. கடத்திச் செல்லப்பட்ட பிணத்தை கடைசியில் கண்டெடுத்த போது சில எலும்புத்துண்டுகள் மட்டுமே கிடைத்தது. அன்றைக்கு சே கொழுத்திய நெருப்பு இன்று லத்தீன் அமெரிக்காவில் மெள்ள ஜனநாயகத்தைக் கொண்டு வருகிறது.

‘‘மௌனம் என்பது சாவுக்குச் சமம். எதுவும் பேசாவிட்டாலும் சாகப் போகிறீர்கள். பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள். எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்.’’அல்ஜீரிய விடுதலைப் போருக்கு உதவி தனக்கு வந்த ரத்தப் புற்று நோயைப் பற்றிக் கவலைப்படாமல் முப்பத்தி ஐந்து வயதில் மரித்துப் போன புரட்சியாளார் ஃபனான்.

இவைகள் எல்லாம் அழகாக மரித்துப் போனவர்கள் அல்ல.ஆனால் மரணம் குறித்த, உடல் குறித்த அக்கறை இல்லாதவர்கள்.மரணித்த போது ஒரு பெரும் வர்க்கமே இவர்களின் மரணங்களைக் கொண்டாடியது. சிம்பிளாக இறந்து போன இவர்கள் அனைவருமே இன்று மக்கள் நாயகர்கள்.ஆனால் சதா நேரமும் தன் உடலின் உபாதைகள் பற்றியும், தனக்கு வந்த நோவு பற்றியும், தனக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் பற்றியும் இடைவிடாது பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு மரணம் என்பது இயல்பானதாக இருக்க வாய்ப்பே இல்லை ஏனென்றால் மரணத்தைக் கண்டு பயப்படுகிற கோழைகள்தான் சாதாகாலமும் தன் உடல் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.தன்னை சூழ உள்ளவர்களும் மக்களும் தன் உடல் நலம் குறித்து கவலை கொள்ள வேண்டும் என கீழ்த்தரமான ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு மரணம் என்பது மரணமல்ல அது ஒரு சாபக்கேடு......

புரட்சியாளர் மாவோ மரணம் குறித்து இப்படிச் சொல்கிறார். “ கோழைகளின் மரணமோ பறவைகளின் இறகுகளை விட இலகுவானது. மக்கள் போராளிகளின் மரணமோ இமயத்தை விட உயர்வானது”
நன்றி :